Thursday, January 1, 2015

Raveendran Natarajan

இறகுகள் விரிந்தன .... 


இந்த புத்தாண்டில் புதிய ஒரு அத்தியாயத்தை எனது வாழ்க்கைப் பயணத்தில் தொடங்குகிறேன். இப்போது எல்லாம் இயற்கை மீதான என் ஆர்வம் சிறிது சிறிதாக  அதிகரித்து வருகிறது. ஏன் என்று பலரும் கேட்க , எனக்குள் நானே அந்த கேள்விகளை பலமுறை கேட்க ஆரம்பித்தேன். முடிவாக நான் அறிந்தது ஒரு குழந்தையின் மனநிலையில்தான் நான் இருக்கிறேன் என்பது மட்டுமே. எப்படி தாயை விட்டு தனித்திருக்க ஒரு குழந்தை அஞ்சுமோ அதே மனநிலைதான் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது. வாழ்க்கையில்  பலமுறை தனிமையில் தவிக்கவிடப்பட்டு இருந்திருக்கிறேன். அந்த அழுத்தங்கள் இயற்கை சூழலில் இருக்கும் போதும் இறகுகள் படபடத்து பறக்கும் போதும் எனக்குள் இருந்ததில்லை.  உலகத்தில் பல காரணங்களுக்கு விடை இருப்பதில்லை. ஆனால் ஏதோ ஒன்றை நிகழ்த்துவதற்கு  நம்மை சுற்றி ஒரு பெரிய செயல் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த செயல் வட்டத்துக்குள் நீங்களும் சுழலாவிட்டால் ஒரு மூலையில் தூக்கி எறியப்படுவீர்கள். அதே சுழலின் நடுவில்  நீங்கள் வந்து விட்டால் உங்களை சுற்றிதான் எல்லாமே சுழலும். எனவே சுழலின் மையப் புள்ளியில் இருப்பது ஒன்றே நம் குறிக்கோளாய் இருந்தால் செயல்களை பற்றி அதிகம் கவலைப்படத் தேவைகள் இல்லை.

சில வருடங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட விபத்து என்னை அறியாமல் எனக்குள் ஒரு பெரிய மன அழுத்தத்தை  விதைத்தது . ஒரு சாலை விபத்தில் நான் எனது வலது கண்ணின் பார்வையை 95 சதவிகிதம் இழந்தேன். அப்போது இருக்கும் கண்ணை விட இழந்த கண்ணின் வலிதான் அதிகம் பாதித்தது. மருத்துவர்களை பொறுத்தவரை நான் கைவிடப்பட்டேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று எல்லோரையும் போலவே என் மன நிலையும் இருந்தது. பல சிந்தனைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போக அதன் உயரம் பிரமிப்பை உண்டாக்கியது. தினமும் இரவு  இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே தூங்க முடிந்தது. கொஞ்சம் உடல் நிலை தேற மனமும் வலுப்பெற்றது. அத்தனை சிந்தனைகளையும் தூக்கி உடைத்தேன்.  இனி என்னால் என்ன சாதிக்க முடியும் என்ற ஒரு பட்டியல் இட்டேன். கிடைக்கும் ஓய்வு நேரங்களை எல்லாம் தேடல்களில் செலவிட்டேன். இயற்கையாய் இயற்கையை ரசிக்கும் சுபாவம் , பறவைகள் காணலில் இருந்த ஈடுபாடு, எனது மூன்றாம் கண்ணாய் கிடைத்த என் ஒளிபதிவுக்கருவி (camera), எனக்கு பல நண்பர்களை அறிமுகப்படுத்தியது. என் வட்டம் பெரிதாக பெரிதாக இப்போது நான் மையப் புள்ளியை நோக்கி நகர ஆரம்பித்தேன். இந்தப் பயணம் எனக்குப் பிடித்திருக்கிறது.


இயற்கையை முழுதும் சார்ந்து வாழும் இறகுகள் சூடிய பறவைகள் எனக்கு வாழ்வில் பல உண்மைகளை உணர்த்தியது. அவைகள் முட்டையில் இருந்து வெளிவருவதில் இருந்து தொடர்ந்து அவைகள் சந்திக்கும் போராட்டம் எளிதானது இல்லை. அவைகள் வாழ்வதற்கும் சாவதற்கும் என்றும்  அஞ்சியது இல்லை. வாழும் வரை ஆனந்தமாக போராடுகின்றன. ஆடி அடங்கும் போது  யார் கண்ணிலும் பெரிதாய் தெரிவதில்லை. இந்த வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.  இவைகளைப் பற்றிய தொடர் தேடலில் ஈடுபட்டேன். உலகம் மொத்தத்திலும் 10,000 வகை பறவைகள் இருப்பதாக அறிந்தேன். இதில் இந்தியாவில் மட்டும் 1301 பறவையினங்கள் இருப்பதாகவும் , தமிழ் நாடை  பொறுத்தவரை 378 என்று ஒரு அறிக்கையும் 420 என்று ஒரு அறிக்கையும் தகவல் தர மதுரை மாவட்டத்தை சார்ந்து எத்தனை பறவைகள் வந்து போகின்றன என்று அறிய ஆவல் தொற்றிக்கொண்டது. இதில் இருந்து துவங்கியதுதான் என் இறகுகளை தொடரும் பயணம்.

 ( தொடரும்)


6 comments:

  1. பெருமையா இருக்கு அண்ணா... பெரிய இடத்துக்கு வரணும் ... நானும் உங்க
    தங்கச்சின்னு சொல்லி பெருமை படுறேன்... இப்பவும் எப்பவும்

    ReplyDelete
    Replies
    1. இந்த பெருமையை ஏற்க்கனவே பெற்றுத் தந்த தங்கைக்கு என் வாழ்த்துக்கள்.

      Delete
  2. wish you all the best for your future journey brother..

    ReplyDelete
    Replies
    1. Thankyou Brother .... I need your support all the way ... :D

      Delete
  3. பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete